அறிவுசார் புத்தகங்களை மாணவர்கள் அவசியம் படியுங்கள்அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுரை

அறிவுசார் புத்தகங்களை மாணவர்கள் அவசியம் படியுங்கள் என்று பேச்சுப்போட்டி தொடக்க நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுரை வழங்கினார்.

Update: 2023-04-28 17:49 GMT

அறிவுசார் புத்தகங்களை மாணவர்கள் அவசியம் படியுங்கள் என்று பேச்சுப்போட்டி தொடக்க நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுரை வழங்கினார்.

அறிவுசார் புத்தகங்கள்

திருப்பூர் மாநகராட்சியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி திருப்பூர் செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் போட்டிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் 5 தலைப்புகளில் போட்டி நடக்கிறது. பேச்சுப்போட்டியில் பங்கேற்றவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள் தான். பரிசு கிடைக்கவில்லை என்று சோர்வடையக்கூடாது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போது நூலகங்களுக்கு சென்று அறிவுசார் புத்தகங்களை படியுங்கள். நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்று பேரறிஞர் அண்ணா கூறுவார். அவசியம் புத்தகங்களை படியுங்கள். புத்தகம் வாசிப்பு, எழுதும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. லட்சியத்தை அடையும் வரை முயற்சி செய்யுங்கள். விடாமுயற்சியுடன் போட்டித்தேர்வை எதிர்கொண்டு வாழ்வில் மேன்மையடைய வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாழ்வியல் பண்பாடு

சிறுபான்மையினர் நல வாரிய உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசியதாவது:-

தலை நிமிரும் தமிழகம் என்ற லட்சியத்தை தமிழக கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 53 பெண் புலவர்கள் இருந்தார்கள். தற்போது தாய் கூட படிக்க முடியாத சூழ்நிலை இருப்பதை மாணவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்திய மொழிகளில் 114 நாடுகளில் தமிழ்மொழி பேச்சு மொழியாக இருக்கிறது. நல்ல புத்தகங்களை தேடிச்சென்று படியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், பொங்கலூர் ஒன்றியக்குழு தலைவர் குமார், செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரி செயலாளர் குழந்தை தெரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்