தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் 36 புதிய பஸ்நிலையங்கள் அமைக்க ரூ.668 கோடி நிதி ஒதுக்கீடு நாமக்கல்லில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

Update:2022-10-21 00:15 IST

தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் 36 புதிய பஸ்நிலையங்கள் அமைக்க ரூ.667.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நாமக்கல்லில அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

அடிக்கல் நாட்டு விழா

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட முதலைப்பட்டியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா திட்ட விளக்கவுரையாற்றினார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசியதாவது:-

நாமக்கல் நகராட்சி புதிய பஸ் நிலையம் கட்டும் பணிக்கு முதற்கட்டமாக ரூ.20 கோடியும், அடுத்த கட்டமாக ரூ.20 கோடியும் உடனடியாக விடுவிக்கப்படும். இந்த புதிய பஸ் நிலையத்தில் 50 பஸ் நிறுத்தங்கள், 57 கடைகள், 2 உணவகங்கள், 3 பயணியர் காத்திருப்பு பகுதி, 2 ஏ.டி.எம். மையம், 3 கட்டண கழிப்பிடங்கள், பொருட்கள் வைப்பறை மற்றும் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைய உள்ளது

கொசவம்பட்டி ஏரியை மேம்படுத்த சட்டமன்ற உறுப்பினர் கோரிய ரூ.40 கோடியில், தற்போது ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் விரிவாக்கம் செய்ய தேவையான நிதியை ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுவட்டச்சாலை பணிக்கான நிலம் எடுக்கும் பணி விரைவில் முடிவடைந்தால், 10 மாத காலத்திற்குள் முழுமையாக பஸ் நிலையம் கட்டும் வேலையும் முடிவடையும்.

கூட்டுக்குடிநீர் திட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளை சேர்ந்த 669 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ஆலாம்பாளையம், படவீடு மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய பேரூராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.399.46 கோடி மதிப்பீட்டில் 98 சதவீதம் பணிகள் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

ராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சி, 523 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.854.37 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பரமத்தி ஒன்றியங்களை சேர்ந்த 547 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.329 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள பணிகள் ஆய்வில் ள்ளது. விரைவில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும்.

கவுரவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, அனைத்து பகுதிகளிலும் சாலைகளை சீராக்கி தருவது, பஸ் நிலையங்கள் அமைப்பது, விவசாய உற்பத்தி பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகிக்கும் வகையில் சந்தைகள் உருவாக்கி தருவது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தி நாமக்கல் மாவட்டம் வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து நாமக்கல் நகராட்சி புதிய பஸ் நிலையத்திற்கு அணுகு சாலை அமைப்பதற்கு இடம் தானமாக வழங்கியவர்களை அமைச்சர் கே.என்.நேரு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விழாவில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கீதா, சிவக்குமார், நகராட்சி நிர்வாக சேலம் மண்டல இயக்குனர் சுல்தானா, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்