ஈரோட்டில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்; அமைச்சர் சு.முத்துச்சாமி தொடங்கி வைத்தார்

ஈரோட்டில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் சு.முத்துச்சாமி தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-03 21:02 GMT

ஈரோடு

ஈரோட்டில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் சு.முத்துச்சாமி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற புதிய திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி ஈரோட்டிலும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி கலந்துகொண்டு கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "ஈரோடு மாநகராட்சியில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் வீடுதோறும் தினமும் கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருவதால் தெருக்களில் உள்ள குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு உள்ளது. ஈரோட்டில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 985 வீடுகள் மற்றும் வணிக பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 200 டன் குப்பை பெறப்படுகிறது. சுமார் 250 வாகனங்கள் மூலமாக 1,200 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். இந்த திட்டம் தொடர்பான கருத்துகளை 'ஸ்வச்சதா ஆப்' மூலமாக தெரிவிக்கலாம்", என்றார்.

திடக்கழிவு மேலாண்மை

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சத்திரோடு, சுவஸ்திக் கார்னர், மேட்டூர்ரோடு வழியாக சென்று அரசு ஆஸ்பத்திரியில் நிறைவடைந்தது. இதில் தூய்மை பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றார்கள்.

திடக்கழிவு மேலாண்மை பணிகளில் வீட்டுக்கு, வீடு கழிவுகளை தரம்பிரித்து பெற்று சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். இதில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவக்குமார், மாநகர நல அதிகாரி டாக்டர் பிரகாஷ், செயற்பொறியாளர் பிரகாஷ், மண்டல தலைவர் பி.கே.பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்