சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சு.முத்துச்சாமி எச்சரிக்கை

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துச்சாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2022-05-31 20:39 GMT

ஈரோடு

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துச்சாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஊர்வலம்

ஆண்டுதோறும் மே மாதம் 31-ந் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பல்வேறு இடங்களில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக அளவில் புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவதன் காரணமாக தினமும் 2 ஆயிரத்து 500 பேர் இறக்கிறார்கள். ஆண்டுக்கு 9 லட்சம் பேர் இறந்துவிடுகிறார்கள்.

தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை

புகையிலை பயன்படுத்துபவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது அரசு தரப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புகையிலை பொருட்களை பதுக்கி வைப்பவர்கள், விற்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புகையிலை பழக்கத்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், புற்றுநோய் பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்ணீர் மாசு ஏற்பட்டாலும், அதன் மூலமாகவும் புற்றுநோய் ஏற்படுகிறது. எனவே, தண்ணீர் மாசடைவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெருந்துறை சிப்காட் பகுதியில் சுற்றுச்சூழல் மாசு என்பது அரசின் நடவடிக்கையால் குறைந்துள்ளது. தொழிற்சாலைகளும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயை கண்டறிய மேமோகிராம் போன்ற நவீன கருவிகள் அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். தற்போது அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் கண்டறியும் வசதி உள்ளது.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துச்சாமி கூறினார்.

உறுதிமொழி

ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பெருந்துறைரோடு வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக நடந்து சென்றனர். முன்னதாக புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாநகர் நல அதிகாரி டாக்டர் பிரகாஷ், பொது சுகாதாரத்துறை மாவட்ட திட்ட மேலாளர் பிரீத்தி, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்