வத்தல்மலையில்ரூ.2.23 கோடியில் சாகச சுற்றுலா மையம் அமைக்கும் பணிஅமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு

Update: 2023-08-03 19:00 GMT

வத்தல்மலையில் ரூ.2.23 கோடியில் சாகச சுற்றுலா மையம் அமைக்கும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வத்தல்மலை

தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையானது சுமார் 225 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இங்கு பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, குள்ளினூர், நாயக்கனூர், அரங்கனூர் உள்ளிட்ட 13 மலைக்கிராமங்கள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் வத்தல்மலை அமைந்துள்ளது. பழங்குடி மக்கள் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வருகின்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

வத்தல்மலைக்கு 23 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. வத்தல்மலையை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் வத்தல்மலையை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவித்தது.அங்கு தாவரவியல் பூங்கா, ஏரி, பார்வை கோபுரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. இந்த பணிகள் காலப்போக்கில் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே வத்தல்மலைக்கு கடந்த ஒரு ஆண்டாக அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வத்தல்மலைக்கு செல்வது அதிகரித்துள்ளது.

சாகச சுற்றுலா மையம்

இந்த நிலையில் வத்தல்மலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா மையம் மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைக்க அரசு அறிவித்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் வத்தல்மலையில் சுற்றுலாவை மேம்படுத்த எந்தெந்த பணிகள் மேற்கொள்ளலாம் என்று அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் சாந்தி, சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப் நந்தூரி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் சக்திவேல், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்