லயோலா கல்லூரி மாணவர்கள் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

திருக்கோவிலூா் அருகே சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சென்ற மிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 16 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்

Update: 2023-02-28 18:45 GMT

திருக்கோவிலூர்

கலைநிகழ்ச்சிக்காக

சென்னை லயோலா கல்லூரி மாணவிகள் 35 பேர் உள்பட 70 மாணவ-மாணவிகள் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் 2 நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னையிலிருந்து கல்லூரி பஸ் மூலம் ஆலம்பாடி கிராமத்துக்கு வந்தனர்.

பின்னர் இவர்கள் நேற்று மாலை மாணவ, மாணவிகள் தனித்தனியாக 2 மினி லாரிகளில் அரகண்டநல்லூர் அருகே உள்ள வடகரைதாழனூர் கிராமத்தில் கலைநிகழ்ச்சிக்காக புறப்பட்டு விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். மாணவர்கள் சென்ற மினி லாரியை வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மணிவண்ணன்(வயது 23) என்பவர் ஓட்டினார்.

மாணவர் பலி

அரகண்டநல்லூர் அருகே உள்ள காடகனூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே உள்ள வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக மாணவர்கள் வந்த மினி லாாி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சென்னை அண்ணா நகரை சேர்ந்த எம்.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சாமுவேல்(21) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் படுகாயம் அடைந்த மாணவர்கள் அமுதன், அரவிந்த், ரோகித், ஆசிஷ் உள்பட 16 பேரை அக்கம் பக்கத்தினர் மீ்ட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்களில் சிலரை மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அருகே உள்ள முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

விபத்தை அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் திருக்கோவிலூர் நகராட்சி மன்ற தலைவர் டி.என்.முருகன், துணை தலைவர் குணா, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அரகண்டநல்லூர் பிரபு, வக்கீல் திருச்செல்வன் ஆகியோரும் விரைந்து வந்து காயம் அடைந்த மாணவர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த விபத்து குறித்து மினி லாரி டிரைவர் மணிவண்ணன் மீது அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்