சுவரில் மினி ஆட்டோ மோதி 2 பேர் பலி
கமுதி அருகே சுவரில் மினி ஆட்டோ மோதி 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஓரிவயல் அர்ச்சுன கும்பல் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரவி(வயது 35), ராமர் (34). இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மினி ஆட்டோ ஒன்றில் ஓரிவயல் கிராமத்தில் இருந்து மதுரை அழகர் கோவிலில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் நேற்று மதியம் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
மினி ஆட்டோவை டிரைவர் சுரேஷ்குமார் ஓட்டி வந்தார். அபிராமம் வடக்கூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மினி ஆட்டோ அங்குள்ள தர்கா சுவற்றின் மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ரவி, ராமர் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆட்டோவில் வந்த 3 பேர், டிரைவர் சுரேஷ்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மினி ஆட்டோ மோதியதில் தர்கா சுவரும் இடிந்து சேதமானது.
இந்த விபத்து குறித்து கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.