பால் உற்பத்தியாளர்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்
கறம்பக்குடி அருகே பால் உற்பத்தியாளர்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கறம்பக்குடி அருகே உள்ள கோட்டைக்காடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு பால் உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
இலவச காப்பீடு
ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42 வழங்க வேண்டும், ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆணி வேராய் செயல்படும் கிராம சங்க பணியாளர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும். ஆவினுக்கு பால் வழங்கும் அனைத்து கறவை மாடுகளுக்கும் ஆவின் நிறுவன செலவில் இலவச காப்பீடு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.