பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனங்கள் வழங்க வேண்டும்-தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-11-10 18:45 GMT

ஏமாற்றம் அளிக்கிறது

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தர்மபுரி மாவட்டக்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பு தலைமை தாங்கினார். மாநில செயலாளர்‌ பெருமாள், மாநில பொருளாளர் முனுசாமி, மாநில நிர்வாகி ராமசாமி, மாவட்ட செயலாளர் தீர்த்தகிரி, மாவட்ட நிர்வாகிகள் கந்தசாமி, வள்ளி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது. பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாக்க ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.51-ம் என விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பால் கூட்டுறவு சங்கங்களில் பாலை கொள்முதல் செய்த உடன் பாலின் அளவு மற்றும் தரத்தை கையேட்டில் குறித்து கொடுக்க வேண்டும்.

நிலுவைத் தொகை

கால்நடைகளுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் வழங்கவேண்டும். பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அவர்களுக்கு உரிய பணிபாதுகாப்பு வழங்கவேண்டும். சத்துணவு திட்டத்தில் ஆவின் பால் பொருட்களை சேர்த்து வழங்க வேண்டும்.

பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் முறைகேடு, ஊழல் ஆகியவற்றை முழுமையாக தடுக்க உரிய கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பால் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்