நள்ளிரவில் நடந்த பயங்கரம்: உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கன். இவருக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். பொன்னுரங்கன் அவரது மகன்கள் உடன் இணைந்து அதே ஊரில் உரக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் திருமணமான அவரது மகள் திரவியம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் சரியில்லாமல் பொன்னுரங்கனுடன் நத்தாமூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திரவியம் தனது குழந்தைகள் ரியாஷினி (வயது 5) மற்றும் விஜயகுமாரியுடன் (வயது 3) வீட்டில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னுரங்கன் காப்பாற்ற சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் அதே இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.