விவசாயியிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த இடைத்தரகர் கைது

கொப்பரை தேங்காய் விற்பனை தொடர்பாக விவசாயியிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-23 13:18 GMT

கொப்பரை தேங்காய் விற்பனை தொடர்பாக விவசாயியிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.

விவசாயி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலத்தை சேர்ந்தவர் பிரேமானந்த். விவசாயி. இவர் அங்குள்ள விவசாயிக ளிடம் கொப்பரை தேங்காய்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவரிடம் கோவையை சேர்ந்த நாராயணசாமி, சிவக்குமார், ராதாகிருஷ்ணன், மனோஜ்குமார், சக்தி வடிவேலு, வேணு கோபால், ஐதராபாத் வேகம் பஜாரை சேர்ந்த வியாபாரி பஜ்ரங்லால் பாட்டி (43) ஆகியோர் கொப்பரை தேங்காய் வாங்கும் இடைத்தரகர்களாக இருந்தனர்.

ரூ.1½ கோடி மோசடி

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி முதல் ஜூன் மாதம் 8-ந் தேதி வரை பிரேமானந்திடம் வாங்கிய 12 லோடுகள் கொப்பரை தேங்காய்களை இடைத்தரகரான பஜ்ரங்லால் பாட்டி உள்ளிட்டோர் ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு ரூ.2 கோடியே 18 லட்சத்து 11 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்தனர்.

ஆனால் இடைத்தரகர்கள் முழு பணத்தையும் பிரேமானந்திடம் கொடுக்காமல் ரூ.72 லட்சம் மட்டுமே கொடுத்தனர். மீதமுள்ள ரூ.1 கோடியை 46 லட்சத்து 11 ஆயிரத்து 480 கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.

சிறையில் அடைப்பு

இது தொடர்பாக பிரேமானந்த், அவர்களிடம் பலமுறை கேட்டும் பணத்தை தரவில்லை என்று தெரிகிறது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரேமானந்த் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்தவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த இடைத்தரகர் பஜ்ரங் லால் பாட்டியை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்