நடிகன் நாடாள முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் எம்.ஜி.ஆர் - சைதை துரைசாமி

‘நடிகன் நாடாள முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் எம்.ஜி.ஆர்.’ என்று சைதை துரைசாமி புகழாரம் சூட்டினார்.

Update: 2022-06-11 23:30 GMT

நூல் வெளியீட்டு விழா

கண்ணதாசன் கலைக்கூடம் மற்றும் மனிதநேய அறக்கட்டளை சார்பில் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய 'எம்.ஜி.ஆரின் ஆளப்பிறந்த பாடல்கள்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று மாலை நடந்தது.

விழாவுக்கு மனிதநேய அறக்கட்டளை நிறுவனரும், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி தலைமை தாங்கினார். நூலை அவர் வெளியிட முதல் பிரதியை சினிமா தயாரிப்பாளரும், இயக்குனருமான வி.சி.குகநாதன் பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது:-

கருணை வடிவம் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரை என்னவென்று சொல்லி பாராட்டினாலும் தகும். 20-ம் நூற்றாண்டில் தனக்கு இணையாக யாருமே கிடையாது என்ற வாழ்க்கையை வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். நல்ல மனிதராக, சிறந்த நடிகராக, கதாபாத்திரமாக, கொடை வள்ளலாக, கருணை வடிவமாக, அன்பின் அடையாளமாக வாழ்ந்து காட்டினார்.

தேவைப்படுவோரின் தேவை அறிந்து தேடிப்போய் உதவி செய்யும், மகத்தான மனித நேயத்தை மண்ணில் விதைத்தவர். தான் வாழ்ந்த போது செய்த மகத்தான பணிகளால் இன்றைக்கும் மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் சேவைகளை மக்கள் மனதில் கொண்டு சேர்த்தது கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகள் தான். அதனால் தான் ஆட்சி அமைத்ததும் தனது அரசவை கவிஞராக கண்ணதாசனை எம்.ஜி.ஆர். நியமித்து அழகுபார்த்தார்.

வாழ்ந்துகாட்டி வழிகாட்டியவர்

பண்டைய காலங்களில் மன்னர்கள் தான் கொடைவள்ளல்களாக திகழ்ந்தனர். மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்திதான் இல்லாதோருக்கு பொருள் வழங்கினர். ஆனால் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை மக்கள் இதயங்களில் முதலீடு செய்து, கொடைவள்ளலாகவே வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். 'கொடுத்து கொடுத்து மேனியே சிவந்தது எங்கள் திராவிட கர்ணனுக்கு...' என்று கருணாநிதியே பாராட்டியுள்ளார்.

பார்த்தவற்றை, படித்தவற்றை, கேட்டவற்றை, அதில் தெளிந்தவற்றை உள்வாங்கி அதன்படி வாழ்ந்துகாட்டி மற்றவர்களுக்கு வழிகாட்டியவர், எம்.ஜி.ஆர்.

இணையற்ற மாமனிதர்

மக்களுக்காகவே பிறந்து, மக்களுக்காக வாழ்ந்து, இன்றளவும் மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆர். ஒரு தனிப்பிறவி. அவரை பற்றி பேச வார்த்தைகள் நிச்சயம் போதாது. நடிகன் நாடாள முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய அவர், 20-ம் நூற்றாண்டின் இணையற்ற மாமனிதர்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கவிஞர் கண்ணதாசனின் மகன் ராமசாமி, கவியரசு கண்ணதாசன் தமிழ் சங்க துணைத்தலைவர் எம்.கே.மணி, கவிஞர் ஆலங்குடி சோமுவின் மகள் காவேரி லட்சுமணன், புலவர் புலமைபித்தனின் உதவியாளர் மா.குணசேகரன், திருப்பத்தூர் வாஹித், சோரா சோமு, தி.ராஜப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்