அ.தி.மு.க.வை விடவும், தி.மு.க.வில்தான் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அதிகம்: முதல்-அமைச்சர் பேச்சு

அ.தி.மு.க.வை விடவும், தி.மு.க.வில் தான் எம்.ஜி.ஆருடைய பங்களிப்பு அதிகம் என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.;

Update: 2022-11-30 23:55 GMT

சென்னை,

ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா, ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுசிறப்பு மலர் வெளியீடு, திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். நூல் வெளியீட்டு விழா ஆகியவை சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது.

இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 'பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.' நூலை வெளியிட, அதன் முதல் பிரதியை கல்லூரி தலைவர் குமார் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.

தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். பங்களிப்பு

விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்-அமைச்சர் என்ற சிறப்புக்குரியவர் ஜானகி எம்.ஜி.ஆர்.தான். அவருடைய நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இது சிலருக்கு வியப்பாக இருக்கும், அதிர்ச்சியாக இருக்கும், ஆச்சரியமாக இருக்கும். ஆனால், வரலாற்று உண்மையை மனச்சாட்சிப்படி சிந்திக்கும் யாருக்கும் இது அதிர்ச்சியாக இருக்காது. 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். ஒரு தனி இயக்கம் (அ.தி.மு.க.) கண்டார். அந்த இயக்கத்தை பொறுத்தவரைக்கும் அவருடைய பங்களிப்பு என்பது 15 ஆண்டுகள்தான். ஆனால் அதிக ஆண்டுகள், அதாவது 1952-ம் ஆண்டு முதல் 1972 வரை 20 ஆண்டுகள் தி.மு.க.வில்தான் இயங்கிக் கொண்டிருந்தார். இதை அவரே சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறார்.

கருணாநிதியிடம், ஜானகி வைத்த கோரிக்கை

1996-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி 4-வது முறையாக ஆட்சிக்கு வந்தார். அப்போதுதான் ஜானகி, கலைஞருக்கு போன் செய்து வாழ்த்து சொல்லிவிட்டு ஒரு கோரிக்கை வைத்தார். ''சத்யா ஸ்டுடியோ இருக்கும் இடத்தில் கல்லூரி தொடங்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு அனுமதி தர வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். உடனே கலைஞர், "நிச்சயம் அனுமதி தருகிறேன் என்று சொல்லிவிட்டு, உங்கள் உடல் நலம் எப்படியிருக்கிறது, உங்களை நானே விரைவில் வந்து பார்க்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

சொல்லி 2 நாட்களில் ஜானகியின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அவர் மறைந்து விட்டார். மறைந்த செய்தி கேட்டு உடனடியாக ராமாவரம் தோட்டத்துக்கு கலைஞர் சென்றார். அஞ்சலி செலுத்திவிட்டு, பக்கத்தில் இருந்தவர்களிடத்தில் சொல்லியிருக்கிறார், "ஜானகி ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன். 'யார் அந்த கல்வி நிறுவனத்தை நடத்தப்போகிறீர்கள்?' என்று ஒரு கேள்வியையும் கலைஞர் அப்போது கேட்டிருக்கிறார். அப்படி அக்கறையோடு கேட்டு உருவான கல்லூரிதான் இந்த கல்லூரி.

பசுமையான நினைவு

என்னுடைய பாட்டி, கலைஞருடைய அன்னையார் அஞ்சுகத்திடம் எம்.ஜி.ஆர். ரொம்ப பாசமாக இருப்பார், 'அம்மா' 'அம்மா' என்றுதான் அழைப்பார். அடிக்கடி கோபாலபுரத்துக்கு வருகிறபோதெல்லாம் அன்போடு பேசி எல்லோரிடத்திலும் பாசத்தோடு பழகுவார். ஒருநாள் அவர் வந்தபோது, அவரை 'சார்' என்று ஒருமுறை சொல்லிவிட்டேன். உடனே தலைவரிடத்தில் ஒரு புகார் செய்தார், உங்கள் பிள்ளை என்னை பார்த்து 'சார்' என்று சொல்கிறான் என்று சொல்லிவிட்டார். அதெல்லாம் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

அதுமட்டுமல்ல, அவருடைய படம் 'ரிலீஸ்' ஆகிறது என்றால், தியேட்டரில் வரிசையில் நின்று, முதல் ஆள், முதல் டிக்கெட் நான்தான் வாங்குவேன். அதனால் அவர் படம் 'ரிலீஸ்' ஆனவுடன் முதலில் கோபாலபுரம் இல்லத்திற்கு தொலைபேசி செய்து என்னை அழைத்து, படம் எப்படி இருந்தது என்று என்னிடம் கேட்பார். நான் வெளிப்படையாக இது இப்படி இருந்தது, இது அப்படி இருந்தது என்று நான் சொல்வேன். நீங்கள் இந்த சீனில் சூப்பராக நடித்தீர்கள் என்றெல்லாம் சொல்வேன். அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்.

சைகை மொழி

முதல்-அமைச்சர் வருகிறார் என்றால், கோரிக்கை இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த அடிப்படையில், எனக்கு ஒரு கடிதம் லதா ராஜேந்திரனால் தரப்பட்டிருக்கிறது. அரசின் எண்ணம் எதுவோ, அதே நோக்கம் கொண்டதாக இந்தக் கோரிக்கைகள் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

சைகை மொழியைபள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் தேவைகளை கருத்தில்கொண்டு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் துறையை முதல்-அமைச்சர் என்ற முறையில் நான்தான் கையில் வைத்திருக்கிறேன். அந்த வகையில் இந்த கோரிக்கைகளை செயல் திட்டம் ஆக்குவோம் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கத்தின் 133-வது திருவள்ளுவர் சிலையை எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விழாவில், அமைச்சர்கள் க.பொன்முடி, சு.முத்துசாமி, கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., த.வேலு எம்.எல்.ஏ., பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், கல்லூரியின் தாளாளர் லதா ராஜேந்திரன், கல்லூரியின் முதல்வர் மணிமேகலை, வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'எம்.ஜி.ஆர். எனக்கு பெரியப்பா'

எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். உடனான பசுமையான நினைவுகளை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

1971-ம் ஆண்டு 'முரசே முழங்கு' என்று ஒரு நாடகம். இங்கே பிரசாத் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நாடகத்தில் ஓமப்பொடி பிரசாத் என்றுதான் அவரை அழைப்போம். அதில் ஓமப்பொடி என்று அவருக்கு பெயர். அவர் என்னோடு சேர்ந்து நடித்த 40 நாடகங்கள் தமிழ்நாடு முழுவதும் 1971-ம் ஆண்டு தேர்தலின்போது நடத்தப்பட்டது. அதன் முதல் அரங்கேற்றம் சைதாப்பேட்டை தேரடி திடலில் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. நாடகம் தெருவில்தான் போடுவோம், கொட்டகை எல்லாம் கிடையாது. தெருவில் போட்டிருக்கிறோம், மக்கள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள். முன்வரிசையில் எம்.ஜி.ஆரை உட்காரவைப்பதற்காக 'சோபா செட்' போட்டு வைத்திருக்கிறோம். அவர் வந்தார், முதலில் அதை எடு என்றார். எடுத்துவிட்டோம். அப்புறம் தரையில் உட்கார்ந்து நாடகத்தை முழுவதுமாக பார்த்து என்னை பாராட்டினார். எதற்காக என்றால், மற்றவர்களுக்கு மறைக்கக்கூடாது என்ற அந்த நினைப்புடன் கீழே உட்கார்ந்து பார்த்தார். நான் அதை நினைத்து பார்க்கிறேன்.

அதே நாடகத்தின் நிறைவு விழா திருவல்லிக்கேணியில் இருந்த எம்.கே.டி.கலா மண்டபத்தில் கலைஞர் தலைமையில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் நடைபெற்றது. அந்த நாடகத்துக்கு கலைஞர்தான் எங்களுக்கு எல்லாம் மோதிரம் போட்டார். எம்.ஜி.ஆர். எங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் கொடுத்தார். அப்போது கலைஞர், எம்.ஜி.ஆரிடம் சொல்லி, நான் சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறான், ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறான். படிக்கவே மாட்டேன் என்கிறான். அவனுக்கு புத்திமதி சொல்லிவிட்டு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதை எம்.ஜி.ஆர். பேசுகிறபோது சொன்னார். "நீ நடிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் உன் அப்பாவுக்கு ஒரு கவலை, உன் அப்பாவுக்கு இல்லாத அந்த கல்வி உனக்கு வந்தாகவேண்டும். அதனால் நீ நன்றாக படி, பெரியப்பா என்ற முறையில் சொல்கிறேன், நீ படிக்கவேண்டும்" என்று எனக்கு புத்திமதி சொல்லிவிட்டு சென்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்