எம்.ஜி.ஆர். சிலை நிறுவ வேண்டும்

ஆத்தூரில், எம்.ஜி.ஆர். சிலை நிறுவ வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் வலியுறுத்தினார்.

Update: 2023-05-03 16:05 GMT

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், அதன் தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கிராம சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வண்ணப்பட்டி சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும் என்று தி.மு.க. கவுன்சிலர் காணிக்கைசாமி வலியுறுத்தினார்.

இதேபோல் தேவரப்பன்பட்டி சுடுகாட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என்று தி.மு.க. கவுன்சிலர் அழகு சரவணகுமார் கோரிக்கை விடுத்தார். அ.தி.மு.க. கவுன்சிலர் ஆனந்தன் பேசும்போது, அக்கரைப்பட்டி ஊராட்சி மல்லையாபுரம் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் காலனிக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆத்தூரில், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

எனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு அதிகாரிகள் வரும் போது எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை. இதனால் பொதுமக்கள் என்னை இழிவாகவும், கேவலமாகவும் நினைக்கின்றனர் என்று தி.மு.க. கவுன்சிலர் சாதிக் குற்றம்சாட்டினார். கவுன்சிலர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். முன்னதாக ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஹேமலதா மணிகண்டன் வரவேற்றார். முடிவில் ஊராட்சி ஒன்றிய மேலாளர் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்