கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் மேட்டூர் மீனவர் பலி-எல்லையில் பதற்றம்- போலீஸ் குவிப்பு

கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் மேட்டூர் மீனவர் பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-02-17 22:14 GMT

கொளத்தூர்:

மீனவர்கள்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கோவிந்தபாடியை சேர்ந்தவர் காரவடையான் என்கிற ராஜா (வயது 45). செட்டிப்பட்டியை சேர்ந்தவர்கள் ரவி (40), இளைய பெருமாள் (40). மீனவர்களான இவர்கள் 3 பேரும் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மீன்பிடிப்பது வழக்கம்.

கடந்த 14-ந் தேதி இரவு தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் இவர்கள் மான்களை வேட்டையாடி விட்டு, பரிசலில் 2 மூட்டைகளில் மான் இறைச்சியுடன் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை கர்நாடக மாநில வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது. இதில் கர்நாடக வனத்துறை சுட்டதில் ராஜாவுக்கு காயம் ஏற்பட்டது. ரவி, இளையபெருமாள் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர்.

காவிரி ஆற்றில் பிணம்

இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் துப்பாக்கிச்சூட்டின் போது காயம் அடைந்ததாக கூறப்படும் ராஜாவும், அவருடன் இருந்த இளையபெருமாள், ரவி ஆகியோரும் மாயமாகி விட்டனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது. இந்த சம்பவத்தால் தமிழக- கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவியது.

இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் சொரிப்பாறை என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு ஆண் பிணம் மிதந்தது. இதை அறிந்த கிராம மக்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது பிணமாக மிதந்தது கர்நாடக வனத்துறை துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்ததாக கூறப்பட்ட ராஜா என்பதும், துப்பாக்கி சூட்டில் அவர் பலியானதும் தெரியவந்தது. ராஜாவின் உடலைப் பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

பிரேத பரிசோதனை

மேலும் தகவல் அறிந்த சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, மேட்டூர் துணை சூப்பிரண்டு விஜயகுமார், உதவி கலெக்டர் தணிகாசலம் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் ராஜாவின் உடல் மிதந்த இடம் ஈரோடு மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியாகும். இதைத்தொடர்ந்து பர்கூர் போலீசார் விரைந்து வந்து, ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக வனத்துறைக்கு சொந்தமான அலுவலகத்துக்கு நேரில் சென்று அங்கு இருந்த வனத்துறையினர் மற்றும் போலீசாருடன் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார்.

மான் வேட்டை

சம்பவம் தொடர்பாக கர்நாடக வனத்துறையினர் கூறும்போது, கடந்த 14-ந் தேதி இரவு 2 மான்களை வேட்டையாடிய 3 பேர் ஒரு பரிசலில், 2 மூட்டைகளில் மான் இறைச்சியுடன் வந்தனர். இதைப்பார்த்த நாங்கள் அவர்களை சுற்றி வளைத்தோம். உடனே அவர்கள் எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் நாங்கள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினோம். இதில் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. ஆனால் அவர்கள் 3 பேரும் தப்பி சென்று விட்டனர். பின்னர் நாங்கள் மான் இறைச்சி, பரிசலை பறிமுதல் செய்தோம். இது தொடர்பாக மாதேஸ்வரன் மலை போலீசில் புகார் அளித்துள்ளோம். அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றனர்.

இது குறித்து துப்பாக்கி சூட்டில் பலியான ராஜாவின் உறவினர்கள் கூறுகையில், கடந்த 14-ந் தேதி இரவு துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து அவர் பலியாகி இருந்தால், மறுநாளே அவரது உடல் காவிரி ஆற்றில் மிதந்து இருக்கும்.. ஆற்றில் உடல் மூழ்கினால் 24 மணி நேரத்தில் மிதந்து விடும். ஆனால் ராஜாவின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மிதந்துள்ளது. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக வனத்துறையினர் ராஜாைவ பிடித்துச்சென்று சித்ரவதை செய்து அவரை கொன்று வீசி இருக்கலாம். எனவே அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இந்த சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

போலீஸ் குவிப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட ராஜாவின் உடல் காவிரி ஆற்றில் மிதந்ததால், தமிழக-கர்நாடக எல்லை கிராமங்களில் பதற்றம் அதிகமானது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி தமிழக- கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு மாநில எல்லையில் 250-க்கும் மேற்பட்ட தமிழக, கர்நாடக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மதியத்துக்கு பிறகு மீண்டும் தமிழக-கர்நாடகா இடையே போக்குவரத்து தொடங்கியது.

இதனிடையே மாதேஸ்வரன்மலை போலீசார் இளையபெருமாள், ரவி ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை கர்நாடக போலீசார் தேடி வருகிறார்கள். பலியான ராஜாவுக்கு பவனா என்ற மனைவியும், ராதா என்ற மகளும், ரவி, வேல்முருகன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்