மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 50 அடியாக உயர்ந்தது
57 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 50 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்:
மேட்டூர் அணை
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கை கொடுக்காத நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.
கடந்த 10-ந் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 31 அடிக்கு கீழ் வந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருந்ததாலும், அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
நேற்று முன்தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.38 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 496 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 500 கனஅடி நீர் மட்டும் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர் வரத்தை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 49.92 அடியாக உயர்ந்தது.
50 அடியை எட்டும்
அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதே நிலை நீடிப்பதால் நீர்மட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் 50 அடியை எட்டியது. கடந்த ஆகஸ்டு மாதம் 50 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் அதன்பிறகு குறைந்து விட்டது. அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் தற்போது 57 நாட்களுக்கு பிறகு மீண்டும் 50 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.