மேட்டூர் அணை நீர்மட்டம் 119.63 கன அடியாக சரிவு

அணையின் நீர்மட்டம் 45 நாட்களுக்கு பிறகு நேற்று 120 அடியில் இருந்து 119.63 அடியாக சரிந்தது.

Update: 2022-11-26 05:38 GMT

மேட்டூர்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 3-வது முறையாக 120 அடியை எட்டியது. இதனையடுத்து, அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

காவிரி டெல்டா பாசனத்திற்கும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்ட போதிலும், நீர்வரத்து சீராக இருந்ததால் தொடர்ந்து 45 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம், அதன் முழு கொள்ளளவான 120 அடியாக நீடித்தது. இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் குறையத் தொடங்கியுள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 14 ஆயிரம் கன அடியாக சரிந்தது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 11,107 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 10,716 கன அடியாக வந்தது. இன்று காலை சற்று அதிகரித்து 10,878 கனஅடியாக வருகிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரத்தை காட்டிலும் நீர்திறப்பு அதிகமாக இருப்பதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்துள்ளதாலும் அணையின் நீர்மட்டம் 45 நாட்களுக்கு பிறகு நேற்று 120 அடியில் இருந்து 119.63 அடியாக சரிந்தது.

 

Tags:    

மேலும் செய்திகள்