மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு
அணைக்கு வரும் தண்ணீரை விட கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
சேலம்,
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 2 ஆயிரத்து 49 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 2 ஆயிரத்து 107 கன அடியாக வந்து குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதே சமயம் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 100.27 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று நீர்மட்டம் 99.59 அடியாக சரிந்துள்ளது. தொடர்ந்து 256 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.