அகண்ட காவிரி வறண்டு போனதால்பாளம், பாளமாய் வெடித்த மேட்டூர் அணை நீர்த்தேக்கம்புராதன சின்னங்கள் முழுமையாக தெரிகின்றன

நீர்மட்டம் 35 அடிக்கும் கீழே போனதால் மேட்டூர் அணை நீர்த்தேக்கம் பாளம், பாளமாய் வெடித்து விரிசல் விட்டு காட்சி அளிக்கிறது. நீரில் மறைந்திருந்த புராதன சின்னங்கள் முழுமையாக தெரிகின்றன.;

Update: 2023-10-12 20:08 GMT

மேட்டூர்

நீர்மட்டம் 35 அடிக்கும் கீழே போனதால் மேட்டூர் அணை நீர்த்தேக்கம் பாளம், பாளமாய் வெடித்து விரிசல் விட்டு காட்சி அளிக்கிறது. நீரில் மறைந்திருந்த புராதன சின்னங்கள் முழுமையாக தெரிகின்றன.

புராதன சின்னங்கள்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடி, கோட்டையூர், சாம்பஅள்ளி போன்ற பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் அந்த பகுதிகளில் அங்கு பல்வேறு வழிபாட்டு தலங்களை அமைத்து வழிபாடு செய்து வந்தனர்.

மேட்டூர் அணை கட்டுமான பணி தொடங்கியதும் அந்த பகுதிகளில் இருந்து கிராம மக்கள் வெளியேறி வேறு இடங்களில் குடிபெயர்ந்தனர். ஆனால் அவர்கள் அமைத்து இருந்த வழிபாட்டு தலங்கள் மட்டும் அப்படியே இருந்ததால் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

அதன்படி, மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் ஜலகண்டேஸ்வரர் கோவில், நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலய கோபுரம் போன்றவை தண்ணீரில் மூழ்கியுள்ளன. அணையின் நீர்மட்டம் குறையும் போது இந்த புராதன சின்னங்கள் படிப்படியாக வெளியே காட்சியளிக்க தொடங்கும்.

ஓடைப்போல்...

அதாவது, நீர்மட்டம் குறையும் நேரங்களில் லேசாக தண்ணீர் மட்டத்திற்கு மேலே தலை காட்ட தொடங்கும். அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறையும் நேரங்களில் நந்தி சிலையும், கிறிஸ்தவ கோபுரம், ஜலகண்டேஸ்வர கோவில் கோபுரமும் முழுமையாக காட்சியளிக்கும். இதை அறியும் சுற்றுலா பயணிகள் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் கூட்டமாக வந்து இந்த புராதன சின்னங்களை பார்த்து ரசித்து செல்வார்கள்.

இந்த நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 35 அடிக்கும் கீழே போய்விட்டது. இதனால் புராதன சின்னங்கள் முழுமையாக காட்சியளிக்கின்றன. மேலும், அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேல் இருக்கும் நேரங்களில் இங்கு காவிரி பார்ப்பதற்கு கடல் போல் அகன்று விரிந்து காணப்படும். தற்போது நீர்மட்டம் 35 அடிக்கும் கீழ் குறைந்துள்ளதால் அகன்ற காவிரி தற்போது வறண்டு இந்த பகுதி ஓடை போல் சுருங்கியுள்ளது.

மேலும் தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் ஆங்காங்கே பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது. புராதன சின்னங்கள் இருந்த பகுதி புல்வெளியாக காட்சி அளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்