மேட்டூர் அணை இன்று திறப்பு:முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு-தி.மு.க.வினர் திரளானோர் பங்கேற்பு

மேட்டூர் அணை இன்று திறக்கப்படுகிறது. அணையை திறந்து வைக்க மேட்டூருக்கு சென்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் திரளானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2023-06-11 21:08 GMT

மேட்டூர்:

மு.க.ஸ்டாலின்

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இவர். நேற்று சேலம் அண்ணா பூங்காவில் கருணாநிதியின் 16 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். ெதாடர்ந்து மறுசீரமைக்கப்பட்ட சேலம் ஈரடுக்கு பஸ் நிலையம், போஸ் மைதானம், நேரு கலையரங்கம் உள்ளிட்டவற்றையும் திறந்து வைத்தார்.

பின்னர் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிந்த பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டி பேசினார்.

மேட்டூரில் வரவேற்பு

சேலம் அஸ்தம்பட்டி பயணியர் மாளிகையில் ஓய்வு எடுத்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை மேட்டூருக்கு வந்தார். மேட்டூர் அருகே குஞ்சாண்டியூரில் இருந்து மேட்டூர் வரை சாலையில் இருபுறத்திலும் ஏராளமான பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

குஞ்சாண்டியூர் பஸ் நிறுத்தத்தில் நங்கவள்ளி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மடத்துப்பட்டி சின்னு என்ற அர்த்தநாரீஸ்வரர் தலைமையில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் வருகையால் மேட்டூர் நகரம் மற்றும் அணைப்பகுதி எங்கிலும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

முன்னதாக மேட்டூர் அணையின் அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளன. அணைக்கு செல்லும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவிரி டெல்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவதால் சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட 12 மாவட்டத்தில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்