மேட்டூர் அணை நீர்மட்டம் 5 நாட்களில் 3 அடி குறைந்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 நாட்களில் 3 அடி குறைந்துள்ளது.;
மேட்டூர்:
டெல்டா பாசனம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவ மழை நன்றாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே மாதம் 24-ந் தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
3 அடி குறைந்தது
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 108 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 49 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட, நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளதால் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2-ந் தேதி 103.59 அடியாக நீர்மட்டம் இருந்தது. இந்த நீர்மட்டம் நேற்று காலை 100.27 அடியாக குறைந்துள்ளது. அதாவது 5 நாட்களில் 3 அடி குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது.