காய்கறிப்பயிர்களில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு
தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிப்பயிர்களில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு நடைபெற்றது.
தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிப்பயிர்களில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு நடைபெற்றது.
விவசாய கருத்தரங்கு
விவசாயத்தில் ரசாயனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மண் மலடாவதுடன் ரசாயனங்களின் எச்சத்தால் மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக காய்கறி பயிர்களில் தங்கும் ரசாயன எச்சங்கள் பக்க விளைவுகளுக்குக் காரணமாகிறது. இதனைத்தவிர்க்க நமது பாரம்பரிய இயற்கை விவசாயத்துக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் காய்கறிப்பயிர்களில் நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் இயற்கை விவசாயம் என்ற தலைப்பில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட அளவிலான இந்த கருத்தரங்கில் திருப்பூர், அவினாசி, பொங்கலூர், பல்லடம் மற்றும் ஊத்துக்குளி வட்டாரங்களைச் சேர்ந்த 100 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன் கலந்துகொண்டு கருத்தரங்கு புத்தகத்தை வெளியிட்டார். காய்கறிப்பயிர்களில் இயற்கை விவசாயம் என்ற தலைப்பில் பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி இளையராஜா விளக்கம் அளித்தார். காய்கறி பயிர்களில் அங்ககச் சான்று பெறும் முறை குறித்து அங்ககச் சான்று ஆய்வு அலுவலர் ஹேமா கூறினார்.
மேலாண்மை முறைகள்
மேலும் காய்கறிப்பயிர்களில் பாதுகாக்கப்பட்ட சூழலில் இயற்கை விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயி மணி ராதாகிருஷ்ணன் தனது அனுபவத்தை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டார். காய்கறிப் பயிர்களில் அறுவடைக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து டாக்டர் கவிதாஸ்ரீ விளக்கினார்.
முன்னோடி விவசாயி லோகநாயகி இயற்கை விவசாயத்தில் தங்கள் அனுபவங்களை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார். முடிவில் திருப்பூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுவர்ணலதா நன்றி கூறினார்.