மதுரை எய்ம்ஸ் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் வழித்தடம்

மதுரை எய்ம்ஸ் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்..

Update: 2022-07-08 19:16 GMT

திருப்பரங்குன்றம், 

மதுரை எய்ம்ஸ் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்..

எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.24 ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை வசதி கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் வரையிலுமாக எய்ம்ஸ் மருத்துவமனையை மையமாக கொண்டு மத்திய சாலை திட்டத்தின் கீழ் ரூ.21.20 கோடியில் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு தேர்வு செய்த 224 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தினை சுற்றி ரூ.5 கோடியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜைகா) மூலமாக ரூ.1627.70 கோடி கடன் ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மதுரை எய்ம்ஸ்க்கு என்று உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

தற்காலிகமாக ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2026-க்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் சேவை

இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மெட்ரோ ரெயில் சேவை ஏற்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி எய்ம்ஸ் அமையும் இடத்திற்கு மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குனர் சித்திக் மற்றும் அதிகாரிகள் நேற்று வந்தனர். அவர்கள் எய்ம்ஸ் அமையும் பகுதியில் மெட்ரோ ரெயில் சேவைக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

35 கி.மீ. தூரம்

மதுரை ஒத்தக்கடையில் இருந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரையிலுமாக 35 கிலோமீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கான வழித்தடமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது. இதையொட்டி மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஒத்தக்கடையில் இருந்து வழித்தட பகுதிகளை ஆய்வு செய்தனர். மதுரை ஐகோர்ட்டு, வைகை ஆறு, பெரியார் நிலையம், திருப்பரங்குன்றம் வழியே எய்ம்ஸ் மருத்துவமனை வரை வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்