நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான இடத்தில் மெட்ரோ ரெயில் பணி அதிகாரிகள் பேச்சுவார்த்தை
நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான இடத்தில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பாதை அமைக்க 10 அடி இடத்தை பெறுவது தொடர்பாக நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னையில் 2-ம் கட்டமாக சுமார் ரூ.61 ஆயிரம் கோடி செலவில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பாதை மட்டும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 4-வது வழிப்பாதை ஆன கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பாதை ஆழ்வார்பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக அப்பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
2025-ம் ஆண்டு போக்குவரத்து
இந்த பாதையில் போரூர், பூந்தமல்லி பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதை போல் ஆழ்வார்பேட்டை, கலங்கரை விளக்கம், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் பணிகளை தீவிரபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டு இறுதியில் இந்த பாதையில் ரெயில் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
கமல்ஹாசன் நிலம்
இந்த நிலையில் ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் திரைப்படம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நுழைவாயில் அருகில் மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்காக சாலை அகலப்படுத்தும் பணி நடக்க இருக்கிறது. இதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான பட நிறுவனத்தின் நுழைவாயில் அருகில் உள்ள 10 அடி இடத்தை தங்களுக்கு வழங்கும்படி மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள், நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான பட நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.