தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பசுமை குடில்
பசுமை குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும். பசுமைக் குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி உள் பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும். நிழல் வலைகுடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். கவாத்து செய்த பகுதியில் 3 சதவீத காப்பர் ஆக்ஸி குளோரைடு பூஞ்சான கொல்லி கலவையை தடவ வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய் தடுப்பு மருந்துகள் தூர் பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும்.
அறுவடை செய்ய வேண்டும்
இளம் செடிகள் காற்றினால் பாதிக்காத வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்ப்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். பருவமழை முடிந்த பிறகு மரங்களுக்கு 50 கிலோ தொழு உரத்துடன் சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா தலா 2 கிலோ கலந்த ஊட்டமேற்றிய தொழுஉரத்தை இட வேண்டும்.
காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிபிடஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி காற்றினால் மரம் சேதம் அடையா வண்ணம் பாதுகாக்க வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும்.
தோட்டக்கலை
மழைக்காலங்களில் மண்ணில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் மரம் வேருடன் சாய்வதை தவிர்க்க மரத்தை சுற்றி மண் அணைக்க வேண்டும். அறுவடைக்கு தயாராக உள்ள பழங்களை உடனுக்குடன் அறுவடை செய்வதன் மூலம் மரத்தின் சுமையை குறைக்கலாம். மழை முடிந்த பின்னர் 0.25 சதவீத காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது 1 சதவீத போர்டோ கலவையை மரத்தின் வேர் பகுதியை சுற்றி ஊற்றுவதன் மூலம் பூஞ்சான நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் மழை நீர் தேங்கா வண்ணம் நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கொடிவகை காய்கறிகள் சாகுபடி செய்ய ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பந்தல் அமைப்புகளில் வலுவான ஊன்றுகோல்கள் கூடுதலாக நட்டு காற்றினால் சாயா வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
பருவமழை முடிந்த பிறகு 3 சதவீத பஞ்சகாவியா கரைசல் அல்லது 0.5 சதவீத 19:19:19 கரைசலை இலை வழி ஊட்டமாக தெளிக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கண்டவாறு பின்பற்றி தங்களது பயிர்களை பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.