மரவள்ளி பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரவள்ளி பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்;
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நோய் தாக்குதல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது மரவள்ளி பயிரில் அதிக அளவில் மாவுப்பூச்சி மற்றும் செம்பேன் தாக்குதல் உள்ளது. எனவே மரவள்ளி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மரவள்ளி பயிர் சாகுபடியில் மாவுப்பூச்சி மற்றும் செம்பேன் தாக்குதல் தென்படுவதை உருமாறிய நுனி குருத்துகளை அகற்றுவது, மாவுப்பூச்சி தாக்குதல் உள்ள மரவள்ளி செடியை கண்டறிந்து அகற்ற வேண்டும். தேவையற்ற நடவு பொருட்கள், களை செடிகள் மற்றும் இலை சருகுகள் ஆகியவற்றை வயலில் இருந்து அகற்ற வேண்டும்.
மருந்து தெளித்து
விசைதெளிப்பான் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் நன்கு நனையும்படி மருந்து தெளித்து மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும். மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையில் அசார்டிராக்டின் அல்லது மீன் அமில எண்ணெய் லிட்டருக்கு 2 மி.லி. வீதம் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ப்ளோனிக்மைடு அல்லது தையோமித்தாக்சேம் அல்லது ஸ்பைரோடெட்ராமேட், ஓமைட்-ப்ரோபர்கைட் ஆகிய பூச்சிகொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளபோது தெளித்து மரவள்ளி பயிரை காத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.