பாத்திர வியாபாரி சரமாரியாக குத்திக்கொலை

ராயக்கோட்டை அருகே ஹோம் தியேட்டரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பாத்திர வியாபாரி சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-24 18:45 GMT

ராயக்கோட்டை

ராயக்கோட்டை அருகே ஹோம் தியேட்டரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பாத்திர வியாபாரி சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்.

பாத்திர வியாபாரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 63). பாத்திர வியாபாரி. இவர் தினமும் மொபட்டில் ராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு பிளாஸ்டிக் குடங்கள், பாத்திரங்கள் விற்பனை செய்வதற்காக சென்று வருவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல அவர் மொபட்டில் வியாபாரத்திற்காக சென்றார். ராயக்கோட்டை-எச்சம்பட்டி சாலையில் கிருஷ்ணன் என்பவரின் நிலத்தில் அருகில் அவர் சென்ற போது, ஒரு வாலிபர் அவரை வழிமறித்து கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

பரிதாப சாவு

இதில் குடல் சரிந்து பெருமாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவரை கொன்றதும், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த வழியாக சென்றவர்கள் பெருமாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து பெருமாளின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பெருமாளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

விசாரணை

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், துணை சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாளின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு திரும்பி வந்து விட்டது. இதையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணைநடத்தினர். அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

ஹோம் தியேட்டரால் வந்த வினை

கொலை செய்யப்பட்ட பெருமாளுக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. இவர் தனது மகன் மனோகரனுடன் வசித்து வந்தார். பெருமாளுக்கும், அவரது தம்பி திம்மராஜ் மகன் சக்திவேல் (23) என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது. சக்திவேல் வீடும், பெருமாள் வீடும் அருகருகில் உள்ளது. சக்திவேல் தினமும் இரவு நேரத்தில் வீட்டில் ஹோம் தியேட்டரில் அதிக அளவு சத்தம் வைத்து பாட்டு கேட்பதுடன், பிறருக்கு இடையூறு செய்து வந்ததாக தெரிகிறது. இதை பெருமாள் கண்டித்தார். இதுதொடர்பாக சக்திவேலுக்கும், பெருமாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கொல்ல திட்டம்

இதனிடையே நேற்று முன்தினம் மாலையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் தனது பெரியப்பாவை கொலை செய்ய அவர் திட்டமிட்டார். அதன்படி நேற்று காலை பெருமாள் வியாபாரத்திற்கு சென்ற ேபாது சக்திவேல் வழிமறித்து கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த சக்திவேலை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்