கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்கு சித்த மருத்துவ முகாம்
கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கலெக்டர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார். முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமையில், பெரம்பலூர் சித்த மருத்துவ அலுவலர் விஜயன் மற்றும் சித்த மருத்துவர்கள் கலெக்டர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொது உடல் பரிசோதனை மற்றும் அனைத்து தோல் நோய்கள், ஆஸ்துமா, அலர்ஜி, மூட்டு வலி, கழுத்து வலி, சிறுநீரக கல் உடைப்பு, பித்தப்பை கல்லடைப்பு, வயிற்றுப்புண், சர்க்கரை நோய், சினைப்பை நீர்க்கட்டி, தைராய்டு நோய், கருப்பை கட்டி மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்தனர். முன்னதாக முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் இயற்கை மூலிகை குறித்து கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதே போல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவு பிரதி வாரம் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.