மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவு அரங்கம் அமைக்கப்படும்- அமைச்சர் சாமிநாதன்

உடையாளூரில், மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

Update: 2022-11-03 20:29 GMT

உடையாளூரில், மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

கருத்தரங்கம்

மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பம்பப்படையூரில் மாமன்னர் ராஜராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது.

இந்த கருத்தரங்கிற்கு அமைச்சர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சண்முகம் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

கருணாநிதியை, ராஜராஜ சோழனாக பார்க்கிறோம்

திராவிட இயக்கத்தை சேர்ந்த எங்களுக்கு சுந்தர சோழன், பெரியார் ஆவார். காஞ்சியை ஆண்ட ஆதித்த கரிகாலன், பேரறிஞர் அண்ணா. திருவாரூரில் பிறந்து தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த கருணாநிதியை திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் ராஜராஜ சோழனாக பார்க்கின்றோம். அத்தகைய பெருமையோடு இன்று இந்த நிகழ்வில் நாங்கள் கலந்து கொண்டுள்ளோம்.

எனக்கு முன்பாக பேசிய குடவாயில் பாலசுப்பிரமணியன், சோழ நாச்சியார் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்கிற முறையில் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை முதல்- அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய முறையில் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே எங்களது முதல் முதன்மையான கடமையாக இருக்கும்.

கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம்

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ராஜராஜ சோழன் சதய விழா 5 நாள் நிகழ்ச்சியாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவித்துள்ளார். இது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ராஜராஜ சோழன் நிர்வாக திறமை குறித்து வரலாற்று சுவடுகளை கொண்டு நாம் அறியும்போது அவர் கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை நன்கு அறிய முடிகிறது. எந்த பகுதியை அவர் கைப்பற்றினாலும் அந்த பகுதியை அந்த பகுதியில் வாழும் மக்களிடமே ஒப்படைத்து அவர்களையே ஆட்சி செய்ய வைத்து அவர்களிடம் இருந்து முறையாக வரியை பெற்றுக் கொண்ட மாபெரும் அரசனாக ராஜராஜ சோழன் இருந்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் சமூகத்திற்கு மகிழ்ச்சி

அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் இந்த சூழலில் மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா நிகழ்ச்சியை அரசு விழாவாக கொண்டாட முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இது இந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்தை சேர்ந்த அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பை செய்தி மக்கள் தொடர்பு துறை அரசாணையாக இன்று(அதாவது நேற்று) வெளியிட்டுள்ளது.

ராஜராஜ சோழன் நினைவு அரங்கம்

உடையாளூர் பகுதியில் ராஜராஜ சோழன் வாழ்ந்ததற்கான சான்றுகளை கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை மேம்படுத்தி ராஜராஜ சோழன் நினைவாக அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராஜராஜ சோழன் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டால் அவரது பிறந்தநாள் அன்று மட்டும் அந்த இடம் பயன்படுத்தப்படும்.

ஆனால் நினைவு அரங்கம் அமைத்தால் இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், பொதுமக்கள் தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் பயன்படுத்த முடியும்.

ஆய்வு நடத்த வலியுறுத்தப்படும்

ராஜராஜ சோழன் இந்த பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் அவர் இறந்த பிறகு இந்த பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாக சொல்வதற்கான சான்றுகளை, ஆதாரங்களை சேகரிக்க உரிய ஆய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மேற்கொள்வது தமிழ் வளர்ச்சித்துறையின் பொறுப்பில் உள்ளது. எனவே அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இந்த கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். மேலும் இது தொடர்பாக முதல்-அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மண்டலக்குழு தலைவர் அசோக்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி அசோக்குமார், கும்பகோணம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் உள்ளூர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவையாறு அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் தங்கமுத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்