குறைகளை உறுப்பினர்கள் கண்டறிந்து விரைவில் தெரிவிக்க வேண்டும்

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள குறைகளை உறுப்பினர்கள் கண்டறிந்து விரைவில் தெரிவிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.

Update: 2022-06-27 16:54 GMT

பொறையாறு, ஜூன்.28-

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள குறைகளை உறுப்பினர்கள் கண்டறிந்து விரைவில் தெரிவிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் கோவிந்தராஜன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அதன் விவரம் வருமாறு:-தேவிகா: சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலுப்பூர் நடுநிலைப் பள்ளியில் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாய நிலை உள்ளதால் கழிவறையை விரைந்து சீரமைக்க வேண்டும். மேலும் அப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.

அங்கன்வாடி

ஜெயந்தி: தில்லையாடியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். பூச்சாத்தனூர்- தில்லையாடி இடையே பாலம் அமைக்க வேண்டும்.ரஜினி: செம்பனார்கோயில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிவறை மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொண்டத்தூர் பகுதியில் சுடுகாடு சாலை ஏற்படுத்த வேண்டும்.மோகன்தாஸ்: நாச்சிக்கட்டளை- காந்திநகர் இடையே ராஜேந்திரன் வாய்க்காலில் பாலம் கட்ட வேண்டும். இதேபோல் முடிகண்டநல்லூர்- கிடாரங்கொண்டான் இடையே இணைப்பு பாலம் கட்ட வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

குறைகள்

உறுப்பினர்களின் கோரிக்ககளுக்கு பதில் அளித்து ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் கழிவுநீர் கலப்பது மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விரைந்து அதற்கான தீர்வு காணப்படும். ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் முழுமையாக செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் குறைகளை கண்டறிந்து உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் குறைகளை நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். மேலும் ஒன்றிய பகுதியில் பள்ளிக்கூடங்களில் உள்ள கழிவறையை அந்தந்த பகுதி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் போது சுகாதாரம் இல்லாமல் இருந்து எங்களுக்கு தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்