மேல்மலையனூர்அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசை விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆடி மாத அமாவாசை காலங்களில் இக்கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகைபுரிந்து கூட்ட நெரிசல், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவிலும் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கடந்த 11-ந் தேதியன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பக்தர்கள், பொதுமக்களின் கூட்ட நெரிசல், போக்குவரத்தை முறைப்படுத்திடும் விதமாக மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் ஆலோசனையின்பேரில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் கீழ்கண்ட விவரப்படி மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
போக்குவரத்து மாற்றம்
அதன்படி நாளை அமாவாசை தினத்தன்று இயக்கப்படும் சிறப்பு பஸ்கள், தற்காலிக பஸ் நிலையங்கள் வரை மட்டுமே இயக்கப்படும். அங்கிருந்து வள்ளலார் மடம் வரை மினி பஸ் மட்டுமே இயக்கப்படும். அமாவாசை தினத்தன்று இரவு 9 மணிக்கு மேல் வரும் வாகனங்கள், மேல்மலையனூர் எல்லைக்குள் அனுமதிக்காமல் வேலூர், காஞ்சீபுரம் மார்க்கமாக வரும் வாகனங்களை தேவனூர் கூட்டு சாலையிலும், திருவண்ணாமலை மார்க்கமாக வரும் வாகனங்களை அவலூர்பேட்டை சந்திப்பிலும், சேத்துப்பட்டு மார்க்கமாக வரும் வாகனங்களை சங்கிலிக்குப்பம் வாகனம் நிறுத்தும் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பக்தர்கள் தங்களது வாகனங்களை மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மேல்மலையனூர் ஊருக்குள் வருகை தரும் பக்தர்கள், கோவிலுக்கு நெரிசல் இன்றி வந்து செல்லும் வகையில் ஒரு வழிப்பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மேற்கண்ட பாதையை முறையாக பயன்படுத்தி ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.