தர்மபுரி மாவட்டத்தில் இன்று முதல் ராகி கொள்முதல் நிலையங்கள் திறப்பு-கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் ராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதாக கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ராகி கொள்முதல் நிலையம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வினியோகம் செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் மாதாந்திர தேவை 440 மெட்ரிக் டன் என்றும், இதற்காக ராகி சிறுதானியத்தை சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் ராகி அதிகமாக சாகுபடி செய்யப்படும் தாலுகாக்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் ராகி சிறுதானிய நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது.
விற்பனை
தர்மபுரி, அரூர், பென்னாகரம் ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ராகி சிறுதானிய நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் செயல்படும்.
சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் சாகுபடி செய்த ராகியை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற்ற உரிய சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகியவற்றின் நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு ராகியை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை
விற்பனைக்கு கொண்டு வரும் ராகி சிறுதானியத்தை கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கம் செய்து தரம் பிரித்து கொண்டு வர வேண்டும். ராகி ஒரு குவிண்டாலுக்கு அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகையான ரூ.3 ஆயிரத்து 578 சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக செலுத்தப்படும்.
தமிழக அரசின் இந்த அரிய வாய்ப்பை ராகி சாகுபடி செய்த சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். நேரடி ராகி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் குறித்து மண்டல மேலாளரை 9443938008 என்ற செல்போன் எண்ணிலும், 04342-231345, 044-26424560, 26422448 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.