மேகமலை அருவியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி

மேகமலை அருவியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது.

Update: 2023-06-06 18:45 GMT


கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு சென்றனர். அருவி அருகே அமைந்துள்ள சோதனைச் சாவடியில் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் சில சுற்றுலா பயணிகள் வனத்துறையினருக்கு தெரியாமல் பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை அருவிக்கு எடுத்து செல்கின்றனர். மேலும் அருவியில் குப்பை தொட்டிகள் இல்லாததால் சாப்பிட்டு முடித்துவிட்டு பிளாஸ்டிக் பொருட்களை அங்கேயே விட்டு செல்கின்றனர்.

இதனால் அருவியில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து காணப்பட்டது. இந்த கழிவுகளை மலைப்பகுதியில் உள்ள குரங்குகள் தின்பதால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அருவியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து குறைவாக உள்ளது. மேலும் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது.

இதையடுத்து நேற்று மேகமலை வனத்துறையினர் அருவியில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிளாஸ்டிக் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் சேகரித்து அழித்தனர். இனிவரும் நாட்களில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் குப்பைகள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்