தமிழ்நாட்டில் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்...!
தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டு முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே 30 வாரந்திர சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், 31-வது வாரமாக தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள மெகா தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்துக்கொள்ளாதவர்கள் இன்றைய மெகா முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று வரையில் 13 லட்சத்து 72 ஆயிரத்து 219 பேர் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்காக இன்று ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் 8 சுகாதார குழுக்கள் வீதம் 200 வார்டுக்கு 1600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.