முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

Update: 2022-05-29 05:49 GMT

சென்னை,

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். இதில் தேர்தல் பணிக்குழு செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா, வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பா.ம.க. தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான் இந்த பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருந்தது. அதன்படி இந்த சிறப்பு பொதுக்குழு பா.ம.க.வின் புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்தது.

இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார்.பாமக புதிய தலைவராக தேர்வாகியுள்ள நிலையில் முதல்-அமைச்சரை சந்தித்து அன்புமணி ராமதாஸ் வாழ்த்து பெற்றார்.

சந்திப்பிற்கு பிறகு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதல்-மைச்சர் மு.க.ஸ்டாலினுடனான இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, இதில் அரசியல் எதுவும் பேசவில்லை. புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டதற்கு என்னை மனதார வாழ்த்தினார்.

முதல்-அமைச்சரை சந்தித்து தடுப்பணைகள் கட்டுவது குறித்த திட்டத்தை வலியுறுத்தினேன். கால நிலை மாற்றம் குறித்து தொலைநோக்கு பார்வையை முன்வைத்து, அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அடுத்த 30-40 ஆண்டுகளில் சரி செய்ய முடியும் என்று கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்