ரேக்ளா பந்தய போட்டிகள் நடத்துவது குறித்த கூட்டம்
திருக்கடையூரில் ரேக்ளா பந்தய போட்டிகள் நடத்துவது குறித்த கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கடையூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் குதிரை, மாட்டு வண்டி ரேக்ளா பந்தய போட்டி நடத்துவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரேக்ளா போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரிநாள் அன்று மீண்டும் ரேக்ளா பந்தய போட்டி நடத்துவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாட்டுவண்டி, குதிரை வண்டி ரேக்ளா பந்தயம் நடத்துவது குறித்த சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமை தாங்கினார். தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அமிர்த விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரிநாள் அன்று மாட்டு வண்டி, குதிரை வண்டி ரேக்ளா பந்தயம் நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் லலிதா பார்வைக்கு கொண்டு செல்வது. இறுதி முடிவினை மாவட்ட கலெக்டர் அறிவிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.