கிருஷ்ணகிரியில் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-05 05:00 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் கோவிந்தன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஓசூர் முனிராஜ், கிருஷ்ணகிரி ஆனந்தன், தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கோபாலப்பா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது:-

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 7-ந் தேதி திறக்கப்படுகிறது. எனவே பள்ளி வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளியில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள், மாணவர் சேர்க்கைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பள்ளி திறக்கப்படும் நாளிலேயே வழங்கிட வேண்டும். இதர மாணவர்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள், கல்வி இணை செயல்பாடுகள், தொடர்ந்து கற்போம் திட்டத்தை செயல்படுத்துதல் வேண்டும். மேலும் தலைமை ஆசிரியர்கள் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடி தேர்வில் வெற்றி பெற சிறப்பு வகுப்புகள் நடத்திட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இதில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்