மாநில செயற்குழு கூட்டம்

அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது

Update: 2023-05-06 21:11 GMT

ஈரோடு:

தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சீதாராமன் முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மாநகராட்சி பணி விதிகளில் 20 வகை பணியிடங்கள் நீக்கப்பட்டதை அடுத்து, அரசிடம் கூட்டமைப்பின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அரசு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி விடுத்த அரசாணைப்படி நீக்கப்பட்ட பணியிடங்களை சேர்த்துக்கொள்ள உத்தரவிட்ட தமிழக முதல் -அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. மாநகராட்சி பணியாளர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற புதிய பணி விதிகளில் உள்ள தேவையற்ற அயல் பணி விதிகளை நீக்க வேண்டும். பொது விதிக்கு மாறான பணி நிபந்தனைகளை மாற்றம் செய்ய வேண்டும். மாதிரி பணி விதி திருத்தம் குறித்து விவாதிப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்கி தர வேண்டும். மக்கள் தொகையினை அடிப்படையாக கொண்டு மாநகராட்சிகளை சிறப்பு நிலை அ, ஆ, தேர்வுநிலை, நிலை 1, நிலை 2 என 5 பிரிவுகளை வகைப்படுத்தி அதன் அடிப்படையில் ஒரே சீரான பணியிடங்களை கடந்த 2022-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நீக்கப்பட்ட 20 வகை பணியிடங்கள் பணி விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த 20 வகை பணியிடங்களையும் உட்படுத்தி புதிய அரசாணை பிறப்பித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மண்டல செயலாளர் சக்திவேல், ஈரோடு மாநகராட்சி கூட்டமைப்பின் கவுரவ தலைவர் விஜயகுமார், செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் குலோத்துங்கன் மற்றும் பல்வேறு மாவட்ட மாநகராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்