ஹஜ் பயணிகளுக்கான பயிற்சி கூட்டம்
ஹஜ் பயணிகளுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.
மத்திய, மாநில அரசுகளின் ஹஜ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சவூதி அரேபியா அரசு 30 லட்சம் ஹஜ் பயணிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல இதுவரை 4 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த எஞ்சியுள்ள 300 பேருக்கும் இந்த ஆண்டே அனுமதி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் ஹஜ் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்களிடம் பயண கட்டணமாக ரூ.3.50 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கான முதல் விமானம் இந்த மாதம் 7-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட உள்ளது. தினசரி 2 விமானங்கள் வீதம் 10 நாட்களில் 20 விமானங்களில் பயணிகள் செல்ல உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்த பயிற்சி கூட்டம் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் ராமநாதபுரத்தில் ஜமாத் தலைவர் ஹாரூண் ரசீத் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் குதரத்துல்லா முன்னிலை வகித்தார். இதில் ஹஜ் பயணம் செல்ல உள்ள ஹாஜிகள் பலர் கலந்து கொண்டனர். ஹஜ் கமிட்டி அலுவலர்கள், முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் உள்ளிட்டோர் பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்து பேசினர். இதில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜமாத் பொருளாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.