சேந்தமங்கலம்:
கொல்லிமலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கொல்லிமலை சேர்மன் மாதேஸ்வரி, தெற்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ் சந்திரசேகரன், மாவட்ட கவுன்சிலர் பிரகாசம், அரியூர் நாடு ஊராட்சி மன்ற தலைவர் நாகலிங்கம், லேம்ப் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர் துரை, ஒன்றிய கவுன்சிலர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சந்திரசேகரன் பேசுகையில், வருகிற 24-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு சேந்தமங்கலம் தொகுதியில் இருந்து திரளான நிர்வாகிகள் செல்ல வேண்டும். பொதுமக்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். கொல்லிமலையில் சந்து கடைகளில் மது விற்பனையை தடுக்க ஒவ்வொரு ஊராட்சியிலும் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். இதில் ஒன்றிய துணைத்தலைவர் கொங்கம்மாள், பொரணிக்காடு பொன்னுசாமி, சித்தூர்நாடு ஊராட்சி மன்ற தலைவர் செல்லன், வடக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.