வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூரில் உள்ள எண்-2 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா மற்றும் 2005-ம் ஆண்டு முதல் 2010-ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. வட்டார கல்வி அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை முன்னிலை வகித்தார்.
விழாவில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற காலங்களில் நடந்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன், தற்போது தாங்கள் செய்யும் பணி, தொழில்கள் குறித்து ஒருவருக்கொருவர் கேட்டறிந்தனர்.
விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக அச்சு எந்திரம் வழங்கப்பட்டது. முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சதாசிவம் நன்றி கூறினார்.