போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-01-03 18:45 GMT

சத்திரக்குடி,

போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் வரவேற்றார். கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், மக்கள் திட்ட பணிகள் எதுவும் இந்த கூட்டத்தில் இடம் பெறவில்லை. செலவீனங்களுக்கு மட்டும் கூட்டம் நடத்தப்படுகிறது. பணிகள் நடந்தால் சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை என்றார்.

பா.ஜ.க. கவுன்சிலர் கதிரவன்:- போகலூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும். நிதி ஆதாரத்தை அனைவருக்கும் சமமாக பகிர்ந்து அளித்து பணிகள் வழங்க வேண்டும். துணை தலைவர் பூமிநாதன்:- இது குறித்து அனைவரும் பேசி முடிவு எடுப்போம்.

அப்போது பா.ஜ.க. கவுன்சிலர்கள் 3 பேரும் இந்த அஜெண்டாவில் எந்தவித வளர்ச்சி திட்ட பணிகளும் இடம் பெறவில்லை. ஆகையால் கூட்டத்தை புறக்கணிக்கிறோம் எனக்கூறி வெளி நடப்பு செய்தனர். பின்பு மற்ற கவுன்சிலர்கள் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தலைவர் சத்யா குணசேகரன் கூறியதாவது:- பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.70 லட்சத்தில் சாலை, பள்ளிக்கூடங்களில் சுத்திகரிப்பு குடிநீர், சுகாதார வளாகங்கள் கட்டுதல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. போதிய மழை பெய்யாததால் போகலூர் ஒன்றியத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன் ஆகியோரது பரிந்துரையுடன் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட உள்ளது என்றார். முடிவில் யூனியன் மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்