தர்மபுரி மாவட்டத்தில்கால்நடை தீவன தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை தீவன தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கரும்பு சாகுபடி
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரவலாக செய்யப்படுகிறது. கரும்பு சாகுபடிக்கான இடுபொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதேபோல் கரும்பு வெட்டுவதற்கான கூலியும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுடன் கரும்பையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையம்
தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை தீவன தட்டுப்பாடு பரவலாக காணப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கால்நடை தீவனங்கள் தரம் குறைவாக உள்ளன. எனவே விவசாயிகளுக்கு தரமான கால்நடை தீவனங்கள் போதிய அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலக்கோடு சர்க்கரை ஆலைக்கு கரும்பை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தொப்பூர், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு வழங்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் நெல் சாகுபடி கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே தர்மபுரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற மத்திய கால கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பட்டு நூற்பாலை
விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்டம் முழுவதும் நிலங்களை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும். பட்டுக்கூடு உற்பத்தி அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் பட்டு நூற்பாலை அமைக்க வேண்டும். உரக்கடைகளில் தரமான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து தொடர்ச்சியாக ஆய்வு நடத்த வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் கோமாரி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். சில பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்ட பிறகும் மாடுகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் என்ன? என்று ஆய்வு நடத்த வேண்டும். கோமாரி நோய் பாதிப்பிற்கு போடப்படும் தடுப்பூசியின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
நிறைவேற்ற நடவடிக்கை
இதையடுத்து கலெக்டர் சாந்தி பேசுகையில், கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.