நல்லம்பள்ளியில் வட்டார சுகாதார பேரவை கூட்டம்

Update: 2022-12-17 18:45 GMT

நல்லம்பள்ளி:

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷகிலா ஆகியோர் கலந்து கொண்டு, கூட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். இதில் நல்லம்பள்ளி வட்டாரத்தில் பழுதான துணை சுகாதார கட்டிடங்களை கண்டறிந்து, புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும். அடிக்கடி விபத்து நடக்கும் தொப்பூர் கணவாயில் நிரந்தர அவசரகால சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். நல்லம்பள்ளி வட்டாரத்தில் மலை சார்ந்த கிராம பகுதிகள் அதிகளவு உள்ளதால், அந்த பகுதி மக்களின் நலனுக்காக கூடுதல் ஆம்புலன்சு வசதி ஏற்படுத்த வேண்டும். நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனநலம் மற்றும் யோகா டாக்டர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மருத்துவ மேம்பாடு பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், தொண்டு நிறுவன பொறுப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்