தர்மபுரி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு; அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்-தி.மு.க.வினர் பங்கேற்காததால் அதிரடி
தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.வினர் பங்கேற்காத நிலையில் அனைத்து தீர்மானங்களையும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நிராகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
தர்மபுரி நகராட்சி கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் முன்னிலை வகித்தார். இதில் 33 வார்டு கவுன்சிலர்களில், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 3 கவுன்சிலர்களும், தி.மு.க. ஆதரவு பெற்ற ஒரு சுயேச்சை கவுன்சிலரும் மட்டுமே கலந்து கொண்டனர்.
பெரும்பாலான தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கூட்டத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள்
கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ராஜாத்தி ரவி, செந்தில்வேல், மாதேஷ், முன்னா, தண்டபாணி உள்ளிட்டோர் நகராட்சி பகுதியில் எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளப்படவில்லை. குடிநீர், சுகாதாரம், தெரு விளக்கு, குப்பைகள் அகற்றம் உள்ளிட்ட எந்த பணியும் முறையாக செய்யப்படுவதில்லை. கேட்டால் ஆட்கள் பற்றாக்குறை என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் தேவைக்கு மட்டும் பணிகளை மேற்கொண்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தீர்மானம் வைக்கிறீர்கள்.
குறிப்பாக வார்டு சபா கூட்டம் நடத்துவதற்கு ஜமக்காளம், பேனா, குறிப்பேடு ஆகியவை ரூ.5 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இது தேவையற்ற செலவு. குறைந்த விலையில் இந்த பொருட்கள் கிடைக்கும் போது அதிக விலைக்கு இந்த பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு பணிகளுக்கு கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானங்கள் நிராகரிப்பு
இந்த தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றினால் இது வருங்காலத்தில் எங்களை பாதிக்கும். எனவே 51 தீர்மானங்களையும் நாங்கள் நிராகரிக்கிறோம். இன்றைய கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தான் மெஜாரிட்டியாக உள்ளோம். எனவே இந்த தீர்மானங்கள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடாது என்று கூறினர்.
அப்போது நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் பேசுகையில், தர்மபுரி நகராட்சியின் வளர்ச்சிக்கும், அவசர தேவைக்கும் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் எப்படி பணிகளை நிறைவேற்ற முடியும்?. எனவே தீர்மானங்களை நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறினார்.
ஆனால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து காரசார விவாதங்களுக்கு பின்னர் கூட்டம் முடிவடைந்தது. தி.மு.க. மெஜாரிட்டியாக உள்ள தர்மபுரி நகராட்சியில், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.