உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம்
பீமாண்டப்பள்ளியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடந்தது.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி அருகே அலேகுந்தாணி ஊராட்சி பீமாண்டப்பள்ளியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா கல்யாணி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். இதில் செல்லகுமார் எம்.பி. கலந்து கொண்டார். கூட்டத்தில் வேப்பனப்பள்ளியில் இருந்து நல்லூர் வழியாக சூளகிரி வரை பஸ் வசதி செய்து தர வேண்டும். மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். சின்ன கொத்தூரில் இருந்து சூளகிரி வரை சாலை குறுகலாக இருப்பதை அகலப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் காசிலிங்கம் அக.கிருஷ்ணமூர்த்தி ஜேசுதுரைராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான சேகர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பூபதி, வேப்பனப்பள்ளி மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் குமார் ராஜா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.