வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆய்வுக்கூட்டம்

Update: 2023-09-01 19:30 GMT

தர்மபுரி:

வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தர்மபுரியில் நேற்று நடைபெற்றது.

மறு சீரமைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் நசீர் இக்பால், உதவி கலெக்டர்கள் கீதாராணி, வில்சன் ராஜசேகர், தேர்தல் தனி தாசில்தார் அசோக்குமார் மற்றும் துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் 1485 வாக்குச்சாவடிகளும், 878 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 26 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சிறப்பு சுருக்க திருத்தம் 2024 தொடர்பாக புதிய பாகங்கள் அமைத்தல், பகுதிகளை மறு சீரமைப்பு செய்தல், வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச்சாவடியை வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல், வாக்குச்சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்ற மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

1489 வாக்குச்சாவடிகள்

அதன் அடிப்படையில் கடந்த மாதம் 21-ந்தேதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான கோரிக்கைகளை வழங்குமாறு கூறப்பட்டது. இதன்படி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையிலும், உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையிலும் வாக்குச்சாவடி மறுசீரமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,485 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் தற்போது காரிமங்கலம், அரூர் தாலுகாக்களில் தலா ஒரு புதிய பாகமும், நல்லம்பள்ளி தாலுகாவில் 2 புதிய பாகங்களும் என மொத்தம் 4 புதிய வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது. மறு சீரமைப்பிற்கு பின்பு 1,489 வாக்குச்சாவடிகள் உள்ளன. 12 பகுதிகள் சீரமைப்பு, 105 கட்டிடங்கள் இடமாற்றம், 2 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மறுசீரமைப்பு முன்மொழிவுகள் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியாக தலைமை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற்ற பின்பு வாக்குச்சாவடி பட்டியலில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்