தர்மபுரியில்காலநிலை மாற்ற விழிப்புணர்வு கூட்டம்கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது

Update: 2023-08-27 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

விழிப்புணர்வு கூட்டம்

சுற்றுச்சூழல் துறையின் சார்பில் தர்மபுரி மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் தலைமை இயக்குனர் தீபக் பில்ஜி, மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:- தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக தர்மபுரியில் காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற குழு அமைக்கப்பட்டு அதில் வனத்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இடம்பெற்று பணிகளை மேற்கொள்கிறார்கள். தமிழ்நாட்டை காலநிலை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவது தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்தின் இலக்காகும். தட்பவெப்ப நிலையை தாங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

நிலையான வாழ்வு

காலநிலை மாற்றத்திற்கான வலுவான கொள்கை நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் ஆதரவை உருவாக்குதல், பசுமை இல்ல வாயு உமிழ்வை குறைப்பதற்கான உத்திகளை வகுத்தல் போன்றவை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய செயல்பாடுகள் ஆகும். உள்ளூர் அளவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்திற்கும் காலநிலை மாற்ற கொள்கைகளை முறையாக பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு நிலையான வாழ்வை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க உதவி இயக்குனர் மனிஷ்மீனா, தமிழ்நாடு ஈர நிலப் பணி இயக்க உதவி இயக்குனர் திரட்டி பல்லி தருண்குமார், உதவி கலெக்டர்கள் கீதாராணி, வில்சன் ராஜசேகர், அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் பழனிவேலு, தன்னார்வலர் வெற்றிச்செல்வன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்