இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் பூக்களால் மணமேடை அலங்கரிப்பு - 1 லட்சம் பிரசாத பைகள் தயார்; 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் பூக்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் பிரசாத பைகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.

Update: 2023-05-01 20:31 GMT


இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் பூக்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் பிரசாத பைகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.

திக்குவிஜயம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் மீனாட்சியாக ஹலாஸ் பட்டர் மகன் சித்தேசும், சுவாமியாக பிரகாஷ் பட்டர் மகன் கவுதமும் வேடம் தரித்து, போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதைதொடர்ந்து மாப்பிளை அழைப்பும் கோவிலுக்குள் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகள் பெண் வீட்டினர் சார்பில் வழங்கப்பட்டன.

10 டன் வண்ண மலர்கள்

சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடக்கிறது.

இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய திருக்கல்யாண மண்டபங்கள் சுமார் ரூ.25 லட்சம் செலவில் ஊட்டி, பெங்களூரு வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டன.. மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் சூட்டும்போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வருகிறார்கள். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக வடக்கு-மேற்கு ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளுவார்கள். காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது.

அதைதொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருகிறார்கள்.

குளு, குளு வசதி

மீனாட்சி திருக்கல்யாண ஏற்பாடுகள் குறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது:-

பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண்பதற்கு வடக்கு மற்றும் மேற்கு ஆடி வீதிகளில் தகர பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெப்பத்தை தணிக்க குளு, குளு வசதி செய்துள்ளோம். கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தண்ணீர் பாட்டில், பிரசாத பை வழங்க உள்ளோம். பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் பெரிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

செல்போனுக்கு அனுமதி இல்லை

மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்கள் இன்று காலை 6 மணி முதல் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கோபுர நுழைவு வாசல்களில் பரிசோதனைக்கு பின்பு கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் செல்போன் உள்ளிட்ட எப்பொருட்களையும் எடுத்து வர அனுமதியில்லை.

சித்திரை திருவிழாவில் போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் தலைமையில் 9 போலீஸ் சூப்பிரண்டுகள், 20 கூடுதல் சூப்பிரண்டுகள், 25 துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமரா அமைத்தும், டிரேன் மூலமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருக்கல்யாண விருந்து

மேலும் மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு தனியார் பக்தர்கள் சபை சார்பில் சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருது வழங்கப்படுகிறது. இந்த விருந்திருக்கு உணவு தயாரிக்கும் பணி நேற்று மதியம் தொடங்கியது. அப்போது பெண்கள் அதிக அளவில் அங்கு வந்து காய்கறிகள் நறுக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு மாப்பிளை அழைப்பு விருந்தும் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மாநகர் முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்