பழனி அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
பழனி அருகே சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.
பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி பகுதியில் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. பழனி நகரை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில் இருந்துதான் உடுமலை பைபாஸ் சாலை பிரிந்து செல்கிறது. இந்த பைபாஸ் சந்திப்பு பகுதி, தற்போது குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக இங்கு குப்பைகளோடு மருத்துவ கழிவுகளையும் மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர்.
குறிப்பாக ஊசி, காயத்துக்கு கட்டுப்போட்ட கழிவுகள், முகக்கவசம், மருந்து டப்பாக்கள் ஆகியவற்றை கொட்டி செல்கின்றனர். அங்கு வரும் தெருநாய்கள், அவற்றை எடுத்து பிற பகுதியில் போட்டு செல்கிறது. இதேபோல் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சிவகிரிப்பட்டி சாலை பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுப்பதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.